மயிலியிட்டி துறைமுக அபிவிருத்திக்கு, 1 பில்லியன் டொலர் நிதியுதவி!

“யாழ் மயிலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்வதுக்காக நோர்வே அரசாங்கம் சுமார் 1 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக”  அந்நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.

நோர்வே அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்பில், யாழ் காங்கேசன்துறை தெற்கு, வீமன்காமம் பகுதியில் சுமார்  60 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை நோர்வே நாட்டின் இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் இன்று (20) திறந்து வைத்தார்.

அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த மண்டபத்தை நோர்வே அரசாங்கம் நிர்மாணித்து வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட்,

வடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நோர்வே, தொடர்ந்து அந்த திட்டங்களை முன்னெடுக்கும் தெரிவித்ததுடன் மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு நோர்வே அரசு சுமார் 1 பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.