ஊரின் விடுதலையும் மானம்பிராய் பிள்ளையாரும்!

கடந்த மூன்று தசாப்பதங்களாகியும் ஏன் எமது ஊர் இன்னும் இராணுவ பிடியில் இருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை என்ற கேள்விகள் சிந்தனைகள் என்னை போன்ற சிலருக்கும், உங்களை போன்ற பலருக்கும் வந்து உரசிபப்பார்த்து போவதுண்டு. அந்த ஊரின் நினைவின் உரசலை நாமும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில் நம்மில் பெரும்பகுதியினர் பிறந்த ஊருக்கு பதிலாக வாடகை ஊரில் வாழ்வதாலும் மற்றும் பலர் இடம் பெயர்ந்து வேறு வேறு திசைகளில் வேறுகோணங்களில் வாழ்வதாலும்.

எங்கு தான் நாம் எப்படி வாழ்ந்தாலும் , அவையாவும் எமக்கு சொந்த ஊராகாது என்பது எல்லாருக்கும் தெரிந்தும், மீண்டும் பழைய பாணியிலே சரி எப்ப விட்டாலும் அவன் விடட்டும் என்று தட்டிக்கழித்து கொண்டே எமது சுயநல வாழ்க்கையில் நாம் அனைவரும் பயணிக்கின்றோம். இவற்றை எனது குறுகிய அறிவினால் ஆராட்ச்சி செய்து பார்ப்போம் என்ற ஒரு சிந்தனையில் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எனது முடிவுக்கு வந்தேன். சரி விடயத்துக்கு வருவோம்.

எண்ணத்தை தான் நாம் எப்படி செய்தாலும், எமக்கென்று இளைப்பாற ஒரு நிலையான மண் வேண்டும். ஆம் நம்மில் ஒருசிலர் அலசுவார்கள் அரைவாசி விட்டாச்சு முக்காவாசி விட்டாச்சு என்று. உண்மையில் விடுவிக்கப்பட்ட இடங்களில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் எப்படி உள்ளது என்று பார்த்தீர்களா? இல்லை ஆராட்ச்சி செய்தீர்களா? சரி அரைவாசி விட்டால் என்ன முக்காவாசி விட்டால் என்ன அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் எப்படி இருந்தால் தான் எமக்கென்ன என்று இருக்கும் சுயநல கூட்டமும் எம்மோடு தான் உள்ளது. பல திசைகளில் ஓடும் நீரெல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் ஒரு ஓடையில் சங்கமிக்க போதுதான் அவ் நீரோடையின் நீர் ஓட்டம் வேகம்பெறுகின்றது.

ஊர் விடுதலை பெறவேண்டுமாயின் அனைத்து செயல்பாடுகளிலும்
நாம் அனைவருமே ஒரு தெளிவான கட்டுமானத்தின் கீழ் முன்வரவேண்டும். அப்படி அனைவருமே ஒரு கட்டுமானத்தின் கீழ் முன்வரும் பட்ஷத்தில் தான், நாம் ஊரின் விடுதலைக்கு கொடுக்கும் அழுத்தமும் ஒரு அர்த்தமுள்ளதாக அமையும், அத்தோடு ஊரை முடக்கி வைத்திருப்பவனும் சிந்திக்க ஆரம்பிப்பான். உதாரணமாக ஆலயங்களை புனரமைத்து, அங்கே மக்களின் நடமாட்டங்களை ஆலயச்சுழலில் நாம் அதிகரித்து காட்டவேண்டும். ஊரில் உள்ள தொழில்சாலைகளை மீண்டும் புனரமைத்து அங்கே எம்மூர் சார்ந்த உறவுகளுக்கு தொழில்வாய்ப்புகளை செய்து கொடுத்தல் வேண்டும். அப்படி பட்ட சூழலை நாம் உருவாக்கும்போது தான், எமது ஊரும் இராணுவ பிடியில் இருந்து முழுமையாக விடுதலை பெறுகின்ற ஒரு சூழலையும் எம்மால் உருவாக்க முடியும்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு மானம்பிராய் பிள்ளையார் கோவிலின் புகைப்படங்கள் பேஸ்புக் மூலம் பார்க்க கூடியதாக இருந்தது. அதுமட்டுமா! மாதம் ஒரு நாள் மக்கள் போய் கோவிலை தரிசித்து வரலாம் என்றும், வாறவர்கள் வயாவிளான் பாடசாலை அருகே உங்கள் வரவை தாருங்கள் என்றும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட தகவல்களை எல்லாம் அன்றைய காலத்தில் எங்கயோ பார்த்தமாதிரி ஒரு நினைவு. ஆனால் நடந்தது என்ன? இப்போது கோவில் நிகழ்வுகளோ இல்லை கோவிலை பற்றி எவருமே சிந்திப்பதாக சின்னவன் நான் சிறிதளவும் நினைக்கவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, எம்மூர் உறவு ஒன்று தனது முகநூலில் தனது ஆதங்கத்தை கண்ணீர் மழையாக தைப்பூசத்துக்கு ஐவரின் வருகை மட்டுமே பிள்ளையாருக்கு இருந்ததகவும், இராணுவம் பேருந்தில் ஐவர் தான் தாம் பயணித்ததாகவும், ஏன் எம்மவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கின்றார்கள் என்றும்,அயலில் உள்ள கோவில்களுக்கு பலரின் வருகை இருந்ததாகவும் தனது ஆதங்கத்தை பதிவேற்றி இருந்தார்.அவரின் ஆதங்கத்தையும் கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“நேற்றையதினம் தைப்பூசம் பொங்கல் பூசைக்கு இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி அம்மன் ஆலயம் ,வயாவிளான் பிள்ளையார் ஆலயம்,வயாவிளான் தென்மூலை வைரவர் ஆலயம் செல்ல இராணுவம் அனுமதி தந்து இருந்தார்கள்.ஆனாலும் இரு ஆலயத்துக்கு இரண்டு பஸ் நிறைந்த மக்கள் வந்து இருந்தனர். கவலைக்குரிய விடயம் பிள்ளையாருக்கு வெறும் ஐந்து பேர்தான். எங்களை இராணவம் கடைசியாகத்தான் விட்டார்கள். இதில் இருந்து என்ன புரிகிறது எங்களின் ஒற்றுமை. வருத்தத்திற்கு உரிய விடயம்”.

 

சிந்திப்போம் செயல்படுவோம் ..

மிகுதி மீண்டும் அடுத்தவாரம் தொடரும்……………………………

– ஊரவன்-