வயாவிளான் சமூக நல அமைப்பினர் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அவர்களுடன் சந்திப்பு!

வயாவிளான் சமூக நல அமைப்பினர் 10.6.2017 அன்று புதிய யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாரச்சி அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், வரைபடத்துடனான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வயாவிளான் சமூகநல அமைப்பின் தலைவர் திரு.ம.ஜெகநாதன் தலைமையில் திருமதி.இ.கிருஸ்ணானந்தி, திரு.பே.தயாபரன், திரு.எஸ்.சிற்சபேசன்,திரு.ரஜீவன் ஆகியோரடங்கிய உபசெயற்குழு கலந்துகொண்டது.

14.12.2016 அன்று முன்னைய யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையலின் தொடர்ச்சியாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இராணுவ தலைமையகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வயாவிளான் கிராமம் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படும் என முன்னைய யாழ்.கட்டளைத் தளபதி உறுதி தந்ததையும் எடுத்துக்கூறி இடப்பெயர்வுக்குப் பின்னர் மூன்று தலைமுறையைக் கடந்துநிற்கும் எமது கிராமத்தை உடனடியாக விடுவித்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

எமது கோரிக்கையின் நியாயப்பாட்டை ஏற்றுக்கொண்ட தளபதி மீண்டும் ஒருமுறை சந்திப்பதென்றும் முடிவானது. புதிதாக பதவியேற்றுக்கொண்டு சிறிது காலமேயானதால் மூத்த உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசிக்க இருப்பதாகவும், எதிர்வரும் 20ஆம் திகதியளவில் தீர்க்கமான முடிவை தரமுடியும் என்றும் கூறினார்.

இதன்பிரகாரம் இதற்கான சந்திப்பு திகதியை முன்கூட்டியே பெற்று 20ஆம் திகதியளவில் மூன்றாவது சந்திப்பு நடைபெறவுள்ளது.

கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அவர்கள் அன்று மதியம் வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலய மடை-பொங்கலிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

source: vayavilan.org