சர்ச்சைகளின் பின்னர் நடைபெறும் வட. மாகாண சபை அமர்வு!

வடக்கு மாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கட்டத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வில், நகை அடகு பிடிப்பவர்களுக்கான நியதிச்சட்டம் குறித்த குழு நிலை விவாதம் நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் அண்மைய காலமாக நீடித்த சர்ச்சைகள் யாவும் சுமூகமாக தீர்ந்துள்ள நிலையில், இந்த அமர்வு தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடம் கையளித்த சம்பவத்தில் அவைத்தலைவரும் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அது குறித்து விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சபை நடவடிக்கைகள் மிகவும் சுமூகமாக நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.