இரு தசாப்தங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டது மயிலிட்டி துறைமுகம்!

யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது.

மயிலிட்டி ஜே151ஆவது கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, அதற்கான உறுதிப்பத்திரங்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் யாழ். மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி கையளித்துள்ளார்.

இதற்குள், மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயம் என்பனவும் உள்ளடங்குகின்றன.

கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதியை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் மக்கள் பார்வையிடுவதோடு, மயிலிட்டி துறைமுகத்திற்கு தங்களது படகுகளையும் கொண்டுவந்துள்ளனர். அத்தோடு, மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தை சுத்தப்படுத்தும் பணிகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மயிலிட்டியை படையினர் கையப்படுத்தியமையானது, அப்பகுதி மக்களின் வாழ்வதார தொழிலான மீன்பிடியை பெரிதும் பாதித்த நிலையில், குறித்த பகுதியை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் இரு தசாப்தங்களின் பின்னர் மயிலிட்டி மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் கால் பதித்துள்ளனர். கடந்த 27 வருடங்களாக ஸ்ரீலங்காப் படையினரின் பிடியிலிருந்த வலிகாமம் வடக்கின் மயிலிட்டி பிரதேசம் தமது கைகளுக்குக் கிடைத்ததையிட்டு அந்த நிலத்தின் மக்கள் மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் வடித்துள்ளனர்.