வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவு ; மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்!

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் 2 ஆவது நாளாக சாட்சிப் பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மிக முக்கிய சட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரது சாட்சிப்பதிவின் போது மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இம் முக்கிய 5 ஆவது சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் இவ் வழக்கின் 12 ஆவது சந்தேக நபராவார்.

இவர் சட்டமா அதிபரின் நிபந்தனையுடனான மன்னிப்பின் அடிப்படையில் அரசதரப்பு சாட்சியாக மாற்றப்பட்டதுடன் இவரது சாட்சியினை மையமாகக் கொண்டு இவ் வழக்கின் எதிரிகளான குற்றவாளிகளை நிரூபிக்கப்போவதாக வழக்குத்தொடுநர் தரப்பினால் ஏற்கனவே மன்றில் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த 5 ஆவது சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், குறித்த சாட்சி தான் இந்த நீதிமன்றில் சாட்சியளிப்பதன் ஊடாக தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படுமென பகிரங்கமாக மன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மன்றானது சாட்சியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென தெரிவித்திருந்த போதும் பின்னர் ட்ரயல் அட்பார் நீதிமன்ற 3 நீதிபதிகளின் ஏகமனதான முடிவின்படி அவரது சாட்சிப்பதிவை மேற்கொள்வதற்காக மன்றிலிருந்த ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர்.