வடமராட்சி துன்னாலை இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களில் அந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இன்று காலை முதல் வீதிகளில் பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வாகனங்கள் சிலவும், 4 மோட்டார் சைக்கிள்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இந்த பகுதியில் மணல் ஏற்றிவந்த இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில், அவர் உயிரிழந்தமையும் குறிப்பிடதக்கது.