வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் அவசர திருத்தவேலைகள் முடிவு!

இடப்பெயர்வு காலத்தில் வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் மண்டபங்களின் மேற்பகுதியில் முகட்டு ஓடு இடையிடையே இல்லாதிருந்தது. இயற்கையில் இருந்து பாதுகாப்பதற்காக ஆலய பரிபாலனசபையினர் இவற்றை தற்காலிகமாக 10.9.2017 அன்று திருத்தம் செய்துள்ளனர். மிகப் பலம்வாய்ந்த புதிய மரங்கள் மற்றும் தீராந்தி, சிலாகை மரங்கள் என்பன இயற்கையினால் பழுதடையக்கூடும் என்ற காரணத்தினால் தற்காலிக திருத்தவேலைகளைச் செய்வதற்கு பரிபாலனசபை தீர்மானித்திருந்தது.

இடப்பெயர்வுக்கு சில மாதங்களுக்கு முன்னரே ஆலயம் முழுமையாக புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடாத்தப்பட்டது.

அர்த்தறாய மண்டபம், தம்ப மண்டபம் மற்றும் வசந்த மண்டபங்களின் மேலுள்ள சுமார் எழுபதடி நீளமுள்ள முகடுகளே திருத்தம் செய்யப்பட்டவையாகும். வெளியில் இருந்து தருவிக்கப்பட்ட நவீன முகட்டு கூரை தகடுகள் இவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த திருத்த வேலையில் எம்மவருடன், அனுபவமிக்க தொழில்நுட்பப் பிரிவு படைத்தரப்பினரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த திருத்தவேலையின் பெறுபேறுகளில் படைத்தரப்பினரின் தொழில் நுட்பத்தைக் காணக்கூடியதாகவிருந்தது. அதாவது மிகவும் கச்சிதமாக, அழகாக வேலையை செய்துமுடித்திருந்தனர்.

இத்திருத்தம் செய்யப்பட்டதனால் எமது ஆலய விழாக்களில் பக்தர்கள் மழை, வெயிலின் பாதிப்பின்றி வைரவரை நிம்மதியாக தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.

அவதானிப்பு:

இராணுவ குடியிருப்புக்களில் இருக்கும் படைத்தரப்பினர் விவசாயச் செய்கையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இப்படி உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் படையினர் பிரதி வாரமும் வைரவருக்கு படையலிட்டு வழிபாட்டில் ஈடுபட்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் ஆலயத்தில் காணக்கூடியதாகவிருந்தது.

இது பற்றி படைத்தரப்பினரிடம் சினேகபூர்வமாக வினவியபோது தாம் வாராவாரம் வழிபாட்டில் ஈடுபடுவதாகவும், தமக்கு வைரவரில் மிகுந்த நம்பிக்கை உண்டு என்றும் தெரிவித்தனர்.

Source: vayavilan.org