வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு பிரதேசங்களை முழுமையாக விடுவிக்கக் கோரி தொடர் போராட்ட முஸ்தீப்பு?

வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வயாவிளான் சமூகநல அமைப்பின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்களுடன் இணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்க முஸ்தீப்பு காட்டிவருகின்றன. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போராட்டத்தை நடாத்துவதற்கான முன்னெடுப்புக்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வலி. வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வயாவிளான் மற்றும் பலாலி தெற்கில் படையினர் வசமுள்ள காணிகளை மக்கள் பயன்பாட்டிற்கென விடுவிக்கப்படவேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கட்டம் கட்டமாக விடுவிக்காது ஒரேயடியாக முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். அதுவும் குடியிருப்புப் பகுதிகளை விடுவிக்காது எதற்கும் பயன்பாடில்லாத தரிசு நிலங்களையே ஏற்கனவே சிறு அளவில் விடுவித்திருந்தனர். இவையெல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைகளாகும். படைத்தரப்பினரையும், அரச மட்டத்திலும் நேரடியாக வயாவிளான் சமூகநல அமைப்பினர் சந்தித்ததுடன் மகஜரும் கையளித்து மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வந்திருந்தது. தவிரவும் அரச அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே யாழ். கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்காவை இருமுறை சந்தித்து கலந்துரையாடி மகஜர் கையளித்திருந்த நிலையில் 14.12.2016 அன்று நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் வயாவிளான் முழுமையாக விடுவித்து தரப்படும் என வாக்குறுதி தந்திருந்தார். மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கா தற்போது இராணுவ தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பதவிக்கு வந்த மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சியுடனான சந்திப்பில் ஒக்டோபர் மாத விடுவிப்பு பற்றி அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

போர் மௌனிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இந்த வாக்குறுதிகளை நம்பி பத்து மாதங்கள் பொறுத்திருந்தோம். வாக்குறுதிக் காலங்களும் கடந்துவிட்ட நிலையில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணடிக்கப்பட்டு தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்ற உணர்வில் எனியும் அரசையோ, படைத்தரப்பையோ நம்பத்தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

கடந்த 10.10.2017 அன்று நடைபெற்ற வயாவிளான் சமூகநல அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் ”உரிய காலக்கெடு முடிவடைவதற்கு முன்னர் படையினர் வசமுள்ள எமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லையானால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது”என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வயாவிளான் சமூகநல அமைப்புடன் வயாவிளான் மற்றும் பலாலி தெற்கின் வழிபாட்டு தலங்கள், பொது அமைப்புக்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளது. அன்றியும் வலி. வடக்கில் உள்ள பொது அமைப்புக்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றமையும் குறி்ப்பிடத்தக்கது.