யாழ். ஆவரங்காலில் பட்டப்பகலில் கத்திக் குத்து!

யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான குத்துக் காயமொன்று கழுத்துப் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், குத்திய கத்தி, கழுத்துப் பகுதியில் அரைவாசியுடன் முறிவடைந்துள்ளது.

வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ரஜீவன் வயது (32) என்ற குறித்த நபரை, அப்பகுதியில் சென்ற இளைஞர்கள் காப்பாற்றி, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், ஆரம்ப கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு குறித்த நபர் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த சம்பவம் ஏன், எதற்கு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் தெரியவந்திருக்கவில்லை.