வயாவிளான் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களுடன் சந்திப்பு!

வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வயாவிளான் சமூகநல அமைப்பின் தலைவர் ம.ஜெகநாதன் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார்.யாழ். பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஏற்பாட்டில் 30.11.2017 வியாழக்கிழமை செயலாளரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திரு.அங்கஜன் இராமநாதன் உடனிருந்தார்.
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியும், முற்றுகைப் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு விடுவிக்கப்பட வேண்டியதற்கான சாதகமான கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் முன்வைத்ததுடன், அதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


இவ்வருடத்தில் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களின் விபரங்கள் மற்றும் கையளிக்கப்பட்ட மனுக்கள் பற்றி அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார். செயலாளருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டதுடன், ஆதாரபூர்வமான பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள், ஏற்கனவே கைளிக்கபட்ட மனுக்களின் பிரதிகள், வயாவிளான் மற்றும் பலாலி தெற்கின் அமைவிட வரைபடம் என்பனவும் கையளிக்கப்பட்டது.
இவற்றை பூரணமாகப் பரிசீலித்த செயலாளர் அந்த இடத்திலேயே எமது முன்னிலையில் லெப். ஜெனரல் மஹேஸ் சேனநாயக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசும்போது 30.11.2017 வியாழக்கிழமை (இச்சந்திப்பு நடைபெறும் நாள் அதே நேரம்) ஒரு பகுதி விடுவிக்கப்படும்போது ஏன் மற்றப் பகுதிகளையும் விட்டிருக்கலாம்தானே என்ற தொனிப்பொருளில் கூறியதுடன், இப்பகுதிகள் பாதுகாப்பிற்கு அவசியம் இல்லாத பகுதியென்பதால் விடுவித்திருக்கலாம் என்றும் கூறினார்.
அதற்கு இராணுவத் தளபதி தான் இதுபற்றி பரிசீலிப்பதாகக் கூறியிருந்தார்.


சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இக்கலந்துரையாாடல் மிகவும் பயனுள்ளதாக அமைத்திருந்ததாக யாழ். பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் திருப்திதெரிவித்தார்.
வயாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மிக நீண்ட காலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அண்மைக்காலமாகவே மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“எமது விடுதலைக்காக உழைக்கும் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கும் மற்றும் வயாவிளான் சமூக நல அமைப்பினருக்கும் வயாவிளான் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்”..