ஊரவனின் சிந்திக்க வைக்கும் சிறுதுளிகள்!

ஒரு சமூகச் சூழலில் இணக்கம் மற்றும் விட்டுக்கொடுத்தல் இருந்தால் மட்டுமே ஒற்றுமை, நம்பிக்கை,வேகம்,விவேகம் அனைத்து ஒரு சமூகத்தாரிடம் இருந்து பிறப்பெடுக்கின்றது. ஒற்றுமையும் நல்லிணக்கமுமே ஒரு சமூகத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் வலுவான அடித்தளமாகும்.

ஒரு சமூக ஒற்றுமை மலர, வெற்று வார்த்தைகளும், போலிப் பேச்சுகளும், கண் துடைப்பு நடவடிக்கைகளும்,ஒற்றுமையின்மையும் எவ்வகையிலும் உதவாத ஒண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மனித நேயம், நீதி, நியாயம், தர்மம், ஒற்றுமை,நேர்மையான போக்கு ஆகியவற்றின் கொள்கைகளும், செயல்பாடுகளுமே ஒரு சமூக ஒற்றுமையை உருவாக்க வழி வகுக்கும் என்பது உறுதி.

ஒரு சமூகத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பது கொள்கை வேறுபாடுகள் அல்ல. சமூகங்களுக்கிடையில் காணப்படும் ஆதிக்க மனப்பான்மை, வெறுப்பு, பகைமை, மாச்சரியம், பொறாமை, அவநம்பிக்கை, தனி புகழாரம் தேடல், சந்தேகம் ஆகியவையாகும். இவற்றைப் போக்கும் அருமருந்து மனிதநேயமும், மனச்சாட்ச்சியுமே.

ஊர்களால்,சமயத்தால், குறிச்சிகளால் வேறுபட்டிருப்பினும் நாம் அனைவரும் ஒரு ஊர் சார்ந்த ஆறறிவுள்ள மனிதர்கள் என்பதை நினைவுதல் வேண்டும். நமது தேவைகளும், உணர்வுகளும், ஆசைகளும், நிராசைகளும் ஒரே மாதிரியானவை. எனவே, தான் விரும்புவதையே பிறருக்கும் செய்ய விரும்புவோம் என்று எண்ணிச் செயல்பட்டாலே நல்லிணக்கம், நம்பிக்கை ,ஒற்றுமை போன்றவை நம்மைத் தேடிவரும்.

*ஒன்றே குலம், ஒருவனே தேவன் – திருமூலர்

*யாதும் ஊரே, யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன்

*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – வள்ளுவம்

*மனிதர்கள் அனைவரும் ஒரே குலத்தில் இருந்து பிறந்தவர்கள் ஒரு தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள் – பைபிள்

வகுப்புவாதிகள் மக்களைப் பிளக்க வெறுப்பு விதைகள் விதைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பிற கொள்கைகளை, சித்தாந்தங்களை மறுக்கலாம். ஆனால், உணர்வுகளை மதிக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களை கண்ணியமாக உள்வாங்குதல் வேண்டும்.

சமூக சேவைக்கு போட்டி, புறாமைகளை அகற்றி நல்ல சிந்தனைகளால் மட்டுமே மக்களை ஒன்றிணைக்க முடியும். எனவே ஒவ்வொரு சமூகமும் சாதி, மதபேதமின்றி அனைவருக்கும் பலன் கிட்டும் வகையில் சமூக சேவைகளைச் செய்து வர வேண்டும். சமூக சேவை, சமூக சேவைக்காகவே செய்யப்பட வேண்டும்.

சமூக முன்னெடுப்புக்கள் செய்வது போலவே, நாட்டின் அல்லது ஊரின் வளர்ச்சிப் பணிகளிலும் எல்லா சமூகங்களும் பங்கேற்க வேண்டும். இப்பணிகளில் எல்லோரும் இணைந்து செயல்படும் போது சமூகங்களுக்கிடையே நெருக்கம் ஒற்றுமை அதிகமாகும். இப்பணிகளில் ஊடாக எந்தச் சமூகத்தையும் ஒதுக்கவும் கூடாது எந்தச் சமூகமும் ஒதுங்கவும் கூடாது.

நன்மையும், தீமையும் சமமாக மாட்டா,அதேபோல் வாய்மையும் பொய்மையும் சமமாக மாட்ட. மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக, மிகச்சிறந்த உண்மையை கொண்டு பொய்மையை ஒழிப்போமாக இருந்தால் கடும் பகை கொண்டவர்கள் கூட உற்ற நண்பர்களாகி விடுவதைக் காண்பீர்.

அது போலவே ஒரு தீமையை இன்னொரு தீமையின் வாயிலாகக் களைந்து விட முடியாது. வகுப்பு வாதத்தை இன்னொரு வகுப்பு வாதத்தால் ஒழிக்க முடியாது. வகுப்பு வாதிகள் கோபத்தை விதைத்தால் நாம் அன்பை விதைப்போம். அவர்கள் பொய்மையை விதைத்தால் நாம் உண்மையை விதைப்போம். நன்றி

-ஊரவன்-