வயவை லம்போவின் உரிமைப் போர்க்கவிதை!

தமிழீழம் தனியாக வேண்டும்
தமிழா நினைவில் வையடா
தாய்நாட்டை ஆளும் உரிமை
தமிழர் எமக்குத் தானடா

தமிழ் தரணி ஆளுமென்று
எழுந்து சொல்லடா
தம்பி தாயகத்து எதிரிகளை
எரிக்கத் துணியடா

ஆதி காலக் குடியழிக்க
அண்டைநாட்டுப் பகையடா
அஞ்சிப் பகை ஒழிந்து ஓட
அன்னையினமே எழும்படா

வம்சம் வாழ்ந்த நிலத்திலே
வெந்து சாகக் கூடுமா
வேல் எடுத்துத் தாக்கி
வென்ற சரித்திரம் கூறடா

அடிமையாக்கி அடிபணிய
நாம் உணர்ச்சியற்ற மனிதமா?
நம் மண்ணில் உள்ள புல்லும்
புரட்சி செய்யும் தெரியுமா ?

எந்தையர் கட்டிக்காத்த பூமியை
எதிரியிடம் ஒப்படைத்து நிற்பதா
வேல் பிடித்த எங்கள் கூட்டம்
வெகுண்டு எழுந்தால் பார் தாங்குமா

ஏதிலியோடு சேர்ந்த போலி
வாழ்க்கை எமக்குத் தேவையா
செந்தமிழீழம் எங்கள் தேசம்
வான்வரை கேட்கச் சொல்லடா

எண்ணிய வாழ்வு கிட்டும் வரை
ஈழப்போர் அலை ஓயாது
பாரே திரண்டு பகையாய் வரட்டும்
வேங்கைகள் மலை சாயாது

தாயகம் பறிக்க வந்த கயவரை
தயங்காமல் தொலைத்து விடு
உடலே வெந்து உயிரே போகும்
உரிமைப் போரை வென்று விடு

காசிஅண்ணன் சொன்ன கருத்தை
கவனத்தில் வைத்துக் கொள்ளடா
ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை

எண்ணித் துணிந்து எழுந்தால்
ஏட்டில் எங்கள் வீரவரலாறு
கன்னித்தமிழும் துள்ளிச் சிரிக்க
தமிழா தமிழோடு ஒன்றுசேரு

-வயவை லம்போ-