பந்தை சுரண்டி சட்டவிரோதமான முறையில் விளையாடினார்கள் என்ற குற்றச்சாட்டிள் ஆஸ்திரேலியா!

பந்தை சுரண்டி பதப்படுத்தி சட்டவிரோதமான முறையில் விளையாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் Steve Amith – உப தலைவர் David Warner மற்றும் Bangcroft ஆகியோருக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அதிரடியான தீர்ப்பை அறிவித்திருக்கிறது.

ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வோர்னரும் சர்வதேச மற்றும் உள்ளுர் போட்டிகளிலிருந்து ஒரு வருடத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளார்கள். பந்தை சுரண்டும்போது கையும் களவுமாக அகப்பட்ட பாங்ரொவ்ட் ஒன்பது மாதங்களுக்கு போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார். தடை முடிவடைந்து அணியில் சேர்க்கப்பட்டாலும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாங்ரொவ்ட் இருவரும் ஒரு வருட காலத்துக்கு தலைமை பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படமாட்டார்கள். டேவிட் வோர்னர் அணிக்கு திரும்பினாலும் ஒருபோதும் தலைமை பதவிக்கு பரிசீலிக்கப்படமாட்டார்.

இவர்கள் மூவரும் இந்த தண்டனை காலத்தில் கழக மட்ட ஆட்டங்களில் வேண்டுமானால் பங்குகொள்ளலாம். ஒவ்வொருவரும் 100 மணித்தியாலங்கள் உள்ளுர் கழகங்களில் – ஊதியம் பெறாது – சமூக சேவை செய்யவேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய விளையாட்டு ரசிகர்களும் கொதித்துப்போயுள்ளார்கள்.

உயிருக்கு உயிராக நேசித்த தங்களது கிரிக்கெட் நட்சத்திரங்களின் மீது காறி உமிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். போயும் போயும் இப்படி செய்து மானத்தை வாங்கிவிட்டீர்களே என்று கொடும்பாவி எரிக்காததுதான் குறை. ஊடகங்கள் அனைத்திலும் இவர்கள்தான் தலைப்பு செய்தி. கிட்டத்தட்ட போதைப்பொருள் கடத்தி அகப்பட்டவர்களை போல நிமிடத்துக்கொரு வீடியோவை தங்களது செய்தி தளங்களில் போட்டு ஊடகங்கள் போட்டி போட்டு TRPயை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அணி வீரர்களது சமூக வலைத்தளங்களிலும் போய் தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களை இழுத்துவைத்து கிழிக்கிறார்கள் விளையாட்டு ரசிகர்கள். தேசத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திய துரோகிகளே, கபோதிகளே என்று ஆங்கிலத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் – நேற்றுவரை தங்கள் நட்சத்திரங்களாக பூஜித்த – இந்த வீர்களை கழுவி ஊற்றுகிறார்கள்.

உண்மையில் – குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த வீரர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. கையும் களவுமாக அகப்பட்டது மட்டுமல்லாமல் தங்களது குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டுமுள்ளார்கள். அதுவும் இந்த குற்றம் தற்செயலாக நடைபெற்றது அல்ல. நன்கு திட்டமிட்டு கூட்டு களவானிகளாக அரங்கேற்றிய ஒன்று என்பது இந்த குற்றத்தில் உள்ள கூடுதல் சிறப்பு. ஆக, இதற்கு தயவு தாட்சணியம் பார்க்கவே முடியாது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் திறமையானவர்கள்தான். எத்தனையோ உலக சாதனைகளுக்கு இன்னமும் சொந்தக்காரர்கள். ஆனால் இவை மட்டும் ஒரு விளையாட்டை தீர்மானிப்பவை அல்ல. விளையாட்டுக்கென்று ஒரு நேர்மை – தர்மம் – ஒழுக்கம் என்ற இன்னோரன்ன காரணிகள் உள்ளன. ஆஸ்திரேலிய அணியின் பாரம்பரியத்தில் இந்த குணாதிசயங்களை மருந்துக்கும் காணமுடியாது. அவர்கள் எப்போதும் எதிரணியை கிள்ளுக்கீரையாக நினைப்பவர்கள். தங்களோடு விளையாடுவதற்கு எந்த தகுதியும் இல்லாத சுள்ளான்கள் போலத்தான் மற்றைய அணியின் ஒவ்வொரு வீரரையும் மதிப்பிடுபவர்கள். அப்பாவிகளை வம்புக்கு இழுப்பதும் – பச்சையாக சொன்னால் – காட்டான்கள் போல களத்தில் விளையாடுவதுதான் தங்களது பாரம்பரியம் என்று பெருமை கொள்பவர்கள். இதற்கு ஒரிருவர் விதிவலக்கென்றாலும் முக்கால்வாசி வீரர்கள் இந்த வரிசையில் கிடப்பவர்கள்தான்.

இவ்வளவு காலமும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் செய்துவரும் அனைத்து வகையான திமிர்த்தனங்களினதும் மொத்த உருவம் தான் இது .இவர்களது முன்கோபம், ஏனைய அணிவீர்ர்களை சண்டைக்கு இழுப்பது, களத்தடுப்பில்கூட எதிரணியை வம்புக்கு இழுப்பது, தங்களுக்கென்று கிரிக்கெட்டில் தனியான ஒரு சட்டத்தை வைத்து மற்றையவர்களை மிரட்டுவது. அடிதடிவரை சென்று எதிரணியை எப்போதும் ஒரு அச்சநிலையில் பேணுவது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான பாரம்பரிய குணங்கள்.

இவை அனைத்துக்கும் கிடைத்துள்ள நெத்தியடிதான் தற்போது உலகளவில் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தி.

என்னை பொறுத்தவரை – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் Vaughan கூறியிருப்பது போல – தற்போது இடம்பெற்றிருக்கும் பந்து சுரண்டும் விவகாரம் பல காலமாக நடைபெற்றுவருகின்றதொன்று போலத்தான் தெரிகிறது. புதிதாக வந்த ஒரு பச்சை மண்ணு எப்படி ஒழித்து செய்வது என்பது தெரியாமல் அகப்பட்டுவிட்டது.

உண்மையில் இந்த ஒட்டுமொத்த கலவரத்தில் லாவகமாக தப்பி வந்து அநியாயத்துக்கு நல்ல பிள்ளை வேஷம் போடுகிறவர்கள் commentary box பக்கமாக அமர்ந்திருக்கும் கோர்ட் சூட்டு போட்ட Ian Healey வகையாறாக்கள். இவர்கள்தான் ஆஸ்திரேலிய அணியை இப்படியாக இடும்பன் மாடுகள் போல வளத்துவிட்டவர்கள். இப்போதும் commentary செய்கிறோம் என்று மைக்கை எடுத்து வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணியின் சகல அட்டகாசங்களுக்கும் ஜால்ரா போடுபவர்கள். தங்களது இந்த காட்டான் விளையாட்டை ஊர் ஊராக சென்று புகழ் பாடுபவர்கள். போதாக்குறைக்கு அதை தங்களது அனுபவம் என்று கூறி புத்தகங்களை எழுதிக்கூட புளகாங்கிதம் அடைபவர்கள். இவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் பாவம், பந்தை சுரண்டுகிறார்கள். ஆஸ்திரேலிய பிரதமரே தலையை சுரண்டும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

இவர்கள் அனைவரது குற்றங்களையும் சேர்த்து சுமந்துகொண்டு வெளியில் காண்பித்துக்கொள்ள முடியாமல் திணறுகின்ற “அப்பாவி, குற்றவாளிதான்” Steve Smith.

-Theivikan-