வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம் வருடாந்த பொங்கல், பழ மடை பெருவிழா!

25.5.2019 சனிக்கிழமை

வருடாந்த பொங்கல், பழ மடை பெருவிழா எதிர்வரும் 25.5.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. வழமைபோலன்றி இம்முறை ஆலய வளாகத்தின் இடப்பரப்பு குறுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுமானங்களினால் வழிபாட்டு இடம் முன் நகர்த்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம். பழ மடைக்கான பரப்பளவு இதனால் குறைவடைந்துள்ளது.

சென்ற வருடங்களில் இராணுவ கட்டமைப்பிற்குள் ஆலயம் இருந்த காரணத்தினால் மக்கள் இன்னோரன்ன கெடுபிடிகளை சந்திக்க நேரிட்டது. முன்கூட்‌டியே வந்து இராணுவ நுளைவாயில் காத்திருப்பு, அடையாள அட்டை கொடுத்து கையொப்பம் இடல், கொண்டுவந்த உடமைகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு, கூனிக்குறுகி இராணுவ வாகனத்தில் பிரயாணம், ஆலயத்தில் விருப்பமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட சில இராணுவ கட்டுப்பாடுகள் என மக்கள் முகம் கொடக்கவேண்டிய நிலை அன்று இருந்தது. இதனால் முதியவர், நோயாளர் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்திருந்தனர்.

இம்முறை இவை யாவும் இல்லாத நிலையில் மக்கள் சுதந்திரமாக பொங்கல், பழ மடை பெருவிழாவைக் கொண்டாடவுள்ளனர். இதனால் பொங்கலிடுவோரும், பழ மடை பரப்புவோரும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் ஆலய உள் வளாகமும், வெளி வளாகமும் நெருக்குவாரத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

கணிசமான உள்நாட்டு, வெளிநாட்டு எமது உறவுகள் பொங்கல், பழ மடை பெருவிழாவில் பங்குகொள்ள ஆவலாக உள்ளதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.

மதியம் ஒரு மணிக்கு முன்னர் நிகழ்வுகள் நிறைவடையக்கூயதாக பொங்கலை காலை 8.00 மணிக்கே ஆரம்பிக்க உள்ளனர்.

பொங்கல், பழ மடை பெருவிழாவிற்கான அறிவித்தல்கள் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கான ஒழுங்குகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொங்கல், பழ மடைக்கான பொருட்களை தாராளமாக எடுத்து வரும்படி மக்களுக்கு கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானவைரவர் ஆலயம் இராணுவ கட்டமைப்பில் இருந்து விடுபட்ட பின்னர் படிப்படியாக ஆலய வளாகம் புத்தெழுச்சி பெறுகிறது. ஆரம்பத்தில் இருந்த பய உணர்வு படிப்படியாக இல்லாது போயுள்ளது. வெள்ளிக்கிழமை வழிபாடுகள், கூட்டுப் பிரார்த்தனைகள், விசேட தின வழிபாடுகள், வருடாந்த அலங்காரத் திருவிழா வழிபாடுகளென களைகட்டுகிறது. எல்லாவற்றிலும் ஆரவமுடன் எமது மக்கள் பங்குபற்றுகிறார்கள்.

இதற்கு ஈடுகொடுத்து ஆலய புனர்நிர்மாணப் பணிகளும் தொடர் நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எமது மக்களின் ஆரவமேலீட்டினால் நிர்மாணப் பணிகளில் மக்கள் முழுமையாகப் பங்குகொள்கிறார்கள்.