பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சி.வி.யிடம் கோரிக்கை!

வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரை விசாரணை முடிவடையும் வரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு நேற்றைய தினம் பணித்தார்.

இந்த நடவடிக்கைக்கு, வடக்கு மாகாண சபையில் பெரும்பான்மை அங்கத்துவம் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, வடக்கு மாகாண சபையில் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.