தமிழ் தேசிய உணர்வினை சாகடிக்கின்றனர்: சர்வேஸ்கரன்

தமிழ்த் தேசிய உணர்வினை சாகடிக்கின்ற செயலினை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி குற்றஞ்சாட்டப்பட்ட வடக்கு அமைச்சர்கள் இருவரை பதவி விலகுமாறு பணித்தமை மற்றும் இருவருக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை தொடர்பாக, முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுநரிடம் 22 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு கடிதமொன்றை கையளித்துள்ளனர். இது தொடர்பாக எமது ஆதவன் செய்திச் சேவை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, தமிழரசுக் கட்சியினர் தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள என்ன வேண்டுமானும் செய்வார்கள் என்பதற்கு, முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நிலைப்பாடு ஒரு உதாரணம் என்றும் குறிப்பிட்டார.

மேலும், கூட்டமைப்பில் இருக்கின்ற ஏனைய கட்சிகளுக்கு எதிராக கூட்டாட்சியில் இருக்கின்றவர்களையும் இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கு இவர்கள் தயங்கமாட்டார்கள் எனக் குறிப்பிட்ட சர்வேஸ்வரன், இத்தகைய செயற்பாடுகள் தமிழ் தேசியத்தை மழுங்கடிப்பதாகவே அமையுமென மேலும் தெரிவித்தார்.

source:athavan news