27 வருடகால ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது மயிலிட்டித் துறைமுகம், சுற்றியுள்ள 54.6 ஏக்கர் நிலப்பரப்பும் ஜூலை 3ல் விடுவிப்பு!

படைத்தரப்பின் ஆக்கிரமிப்பிலிருந்து கடந்த 27 வருடங்களின் பின்னர் மீள்கிறது மயிலிட்டித் துறைமுகம்.
எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை இத் துறைமுகம் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என பலாலி பாதுகாப்புத் தலைமையக ஊடகப் பிரிவு நேற்று அறிவித்துள்ளது. அத்துடன் மயிலிட்டித் துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஜே 249 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 54.6 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படவுள்ளது.

இதேவேளை துறைமுகத்தை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள படைமுகாம்கள் பின்நகர்த்தப்பட்டு வருகின்றன.
27 வருட இடம்பெயர்வு இன்னல் நிறைந்த வாழ்வின் பின்னர் மயிலிட்டி மக்கள் தமது சொந்த மண்ணை மிதிக்கவுள்ளனர்
1990ம் ஆண்டு படை நடவடிக்கையின் போது வலி.வடக்கின் பெரும்பாலான பகுதிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டன.
மிகச் சிறந்த மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டியும் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றது.


இதனால் பெரும்பாலும் கடல்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த இந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வாதாரத்துக்கு வழியற்ற நிலையில் முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் யுத்தம் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இத்துறைமுகம் விடுவிக்கப்படாது படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.
இந்நிலையிலேயே 27 வருடங்களின் பின்னர் மயிலிட்டித் துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது.
எதிர்வரும் 3ம் திகதி இந்தத் துறைமுகம் அதனை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டு மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது. அன்று காலை 9 மணியளவில் இதற்கான நிகழ்வு இடம்பெறுமென என பலாலி பாதுகாப்புத் தலைமையக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.