யாழ். தனியார் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை செய்த ஒன்பது பேருக்கு கிருமித் தொற்று!

யாழில். உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேர் கண்ணில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

யாழில்.உள்ள பிரபல தனியார் வைத்திய சாலையில் கடந்த சனிக்கிழமை காலை கண்ணில் ” கற்ராக் ” சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் அன்றைய தினம் கண்ணில் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கபபட்டவர் ஒருவர் தெரிவிக்கையில்,

கடந்த சனிக்கிழமை எமக்கு பிரபல கண் வைத்திய நிபுணரால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினமே சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக வருமாறு கூறினார்கள். அதன் படி மறுநாளும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன்.

அன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு நித்திரையின் பின்னர் மறுநாள் திங்கட்கிழமை காலை கண்ணில் வலி ஏற்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் சாதாரண வலியாக இருக்கும் என அதனை பெரிது படுத்தவில்லை.

அன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை சத்திர சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி , கண்ணில் வலி உள்ளதா , என வினாவினார்கள் நான் அதற்கு ஆம் என பதில் சொன்னதும் உடனடியாக வைத்திய சாலைக்கு வருமாறு கூறினார்கள். அதனை அடுத்து நான் அங்கு சென்ற போது , என்னுடன் சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களும் அங்கு வந்து இருந்தார்கள். எமக்கு தனியார் வைத்திய சாலையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் திங்கட்கிழமை இரவு எம்மை மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

தற்போது எமக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக கண்ணில் ஏற்பட்ட கிருமி தொற்றுக்காவே எமக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

தனியார் மருத்துவ மனையில் கண்ணில் சத்திர சிகிச்சைக்காக 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையில் பணத்தினை செலவு செய்து உள்ளோம். தற்போது யாழ்.போதனா வைத்திய சாலை கண் சிகிச்சை விடுதியில் தங்கி சிகிச்சை பெறுகின்றோம். என தெரிவித்தனர்.

மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு.

இவ்விடயம் தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியிடம் கேட்ட போது ,

தனியார் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட கிருமி தொற்றுகாரணமாக பாதிக்கப்பட்ட 07 ஆண்களும் 02 பெண்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

கிருமி தொற்று தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை நுண்உயிரியல் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்கள். மாதிரிகளை கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். தொற்றுக்கான காரணம் பரிசோதனை முடிவின் பின்னரே தெரிய வரும்.

தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு போதியளவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என தெரிவித்தார்.