யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்றயதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாதோரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிக்மன், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் பிரேத பரிசோதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பெருமளவான பொலிஸார் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் இளைஞனின் சொந்த இடமான உதயபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவராத நிலையில், மூன்று பொலிஸ் விசேடக் குழுக்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.