வலி.வடக்கு வசாவிளான் மக்களுக்கு ராணுவ கட்டளைத் தளபதி வாக்குறுதி!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ராணுவ உயர்மட்டத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி வாக்குறுதி வழங்கியுள்ளார். குறித்த வாக்குறுதியை தொடர்ந்து, மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

வலிகாமம் வடக்குப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்கள் முன்னெடுத்த இந்த போராட்டம், ராணுவ குடியிருப்பு வாயில் வரை பேரணியாக சென்றது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், ராணுவ தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சியும் மக்களுடன் கலந்துரையாடினார். இதன் போது மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தியதோடு, மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதேவேளை, வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக அங்கஜன் ராமநாதனும் குறிப்பிட்டுள்ளார்.