அமரர் நாகமுத்து கந்தசாமி அவர்களின் பன்னிரெண்டாவது வருட நினைவுடனான பதிவு! 14-09-2018

இலங்கை திருநாட்டின் வடபால் வலிகாமம் வடக்குப் பகுதியில் நிலவளமும், கலைவளமும் ,கவின்பெரு ஆலயங்கள் நிரம்பிய இறைவளமும் பொருந்திய பதி வயாவிளான் ஆகும்.

இப்பதியில் ஆன்ற குடிப்பிறந்த பொன்னர் நாகமுத்து, முருகுப்பிள்ளை சின்னம்மா தம்பதியினரின் மூத்த புத்திரனாக 17- 11- 1935 ம் ஆண்டு இப் பூவுலகில் கால் பதித்தார் அமரர் கந்தசாமி. இவருக்கு ஐந்து உடன்பிறப்புக்கள் அமையப் பெற்றனர். அவர்களில் சுப்பிரமணியம் , நடராசா , வல்லிபுரம் ஆகிய பாசமிகு தம்பிமார்கள் இப்போது அமரத்துவம் அடைந்துவிட்டார்கள். தம்பியார் வேல்நாயகம், அருமைத் தங்கை தவமணி ஆகியோர் சிறப்பாக வாழ்ந்து வருகின்றார்கள்.

குடும்பத்தின் வறுமை காரணமாக இளமையிலே பள்ளிப் படிப்பை கருத்தில் கொள்ளாது சுருட்டு கட்டும் தொழிலில் ஈடுபட்டார் அமரர். காலம் உருண்டோட சுருட்டு கட்டியவர் சுருட்டு தொழிலாளி ஆனார். ஏறக்குறைய தனது 22 வது வயதில் சிறு தொழில் அதிபராக ஆரம்பித்த அமரர், மெல்ல மெல்ல வளர்ந்து யாழ்ப்பாணத்தில் சிறந்த ஒரு சுருட்டு தொழில் அதிபராக விளங்கினார். கிட்ட தட்ட நூறுக்கு மேற்பட்ட சுருட்டு தொழிலாளிகள் இவரின் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லாது கண்டி ,கம்பளை ,மாத்தறை , மட்டக்கிளப்பு , அனுராதபுரம் ,அம்பாறை முதலான இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் N.K என அடையாளம் ஒட்டிய சுருட்டு விற்பனையானது. ஈழத்தில் தலைசிறந்த சுருட்டு உற்பத்தியாளர்களிலில் அமரரும் ஒருவர் ஆவர்.

இலங்கை திருநாட்டில் இனப்போர் ஆரம்பித்து பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டது. இடம்பெயர்வு காரணமாக ஆவரங்கால் ,புத்தூர் ,அளவெட்டி ,கோண்டாவில் எனப் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அல்லல் உற்று , தொழில் இழந்து ,பொருள் இழந்து , ஊர் இழந்து திக்கற்று மறுபடியும் புத்துயிர் பெற வேண்டுமெனில் வளம்பல கொண்ட , பண்பாளர் நிறைந்த வந்தோரை வரவேற்று உபசரிக்கும் பாங்கால் உறைந்த தென்மரார்ச்சி பதியில் மா , பலா ,தென்னை எல்லாம் செழித்தோங்கும் தேன் சொரியும் மீசாலைப் பதியே சிறந்தது என தேர்ந்தெடுத்தார் அமரர். 1990 ஆண்டு மீசாலைப் பதியை வந்தடைந்த அமரர் காணியுடன் வீடு ஒன்றை தமக்காய் வாங்கி ,புகையிலை ,சுருட்டு வியாபாரத்தில் ஓங்கி பட்டமரம் தழைத்தது போல் மறுபடியும் பல்வளமும் படைத்தவராய் உயர்ந்து விளங்கினார்.

சகோதரர்கள் ஆயினும் ,பிள்ளைகள், ஆயினும் தன்னுடைய நேர்மையான சொல்லுக்கு கட்டுப்படாதவர்களுடன் நெருங்கி பழகுவதில்லை அமரர். அவர் தனக்கும் தன் மனச்சாட்ச்சிக்கும் நேர்மை என்று பட்டதை நடைமுறை படுத்த ஒருபோதும் பின்நிற்பதில்லை. மனுநீதி கண்ட சோழன் போல் தன் மனச்சாட்ச்சிக்கு சரி எனக் கண்டால் மக்கள் ஆயினும், மருமக்கள், பிறாமக்கள் ஆயினும் மற்றவர் ஆயினும் மன்றின் முன்னிறுத்த ஒருபோதும் தயங்குவதில்லை நேர்மை உள்ளம் கொண்ட அமரர்.

குடும்பத்தின் வளர்ச்சிக்காக தொழில் முயற்சியில் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்த அமரர் ஆன்ம ஈடேற்றத்திற்கும் வழி தேடத் தவறவில்லை. வயாவிளானில் பதியில் வாழ்ந்த காலத்தில் மானம்பிராய் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், திருப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்து, ஆலய சொத்தை அபகரிக்க விடாது பாதுகாத்து, மன்றில் சென்று வாதாடி ஆலய நிருவாக சபையிடம் ஆலய சொத்துக்களை கையளிக்க உறுதுணையாக இருந்தார் அமரர். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை EY43 இலக்கம் இட்ட அன்னாரின் சோமசெட் கார் யாழ்ப்பாணம் பலாலி வீதியூடாக தொண்டைமானாறு செல்வச்சந்நிதிக்கு செல்லத் ஒருபோதும் தவறுவதில்லை. அன்னதானக் கந்தன் அமரரின் செல்வப் பெருக்குக்கு பெரும் பேரருள் புரிந்தான். மீசாலைப் பதியில் வாழ்ந்த காலத்தில் வேம்பிராய் கலட்டி பிள்ளையார் காலை பிடித்து அவன் பேரருளைப் பெற்று சாதனைகள் பல புரிந்தார். விநாயகரின் அருள்மாட்சிக்கு கைமாறாக உற்சவமும் , திருப்பணியும் செய்ய உதவியதோடு , சண்டேஸ்வரரையும் எழுந்தருளச் செய்தார் அமரர் கந்தசாமி. அல்லும் பகலும் இறைநாமமே அவர் நெஞ்சில் குடி கொண்டிருந்தது.

 

அமரர் கந்தசாமி அவர்கள் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை தனது நம்பிக்கைக்கும் , விசுவாசத்துக்கும் பாத்திரமான முத்த மருமகன் மற்றும் மூத்த மகளுடனும் , பேரப்பிள்ளைகளுடனும் சிறப்புற கழித்தார். உடலில் ஏற்பட்ட சுகயீன காரணாமாக சில நாட்கள் வைத்தியசாலையில் இருந்த காலத்திலும் மூத்த மகள்,மருமகன் பேரப்பிள்ளைகளினது அன்பான ஆதரவும் பாசமும் அமரருக்கு மிகவும் சிறப்பாக இருந்து வந்தது.

இறுதிக்காலத்தில் இறைவன் திருவருளைத் தவிர வேறொன்றும் நம்மோடு கூடவராது என்ற அந்த உயர்வான கருத்துக்களை அவர் உள்ளத்தில் பதியலாயிற்று. உடல் தளர்ந்து களைப்புற்று இரு நாட்கள் படுக்கையில் இருந்து மூத்த மகள் கையால் நீர்பருகி, பேரப்பிள்ளைகள் முகம் துடைத்து நீறு அணிந்து நமச்சிவாயப் பதிகம் பாட அவர் உயிர் படுக்கையிலே 14- 09-2006 அன்று  இறைவன் திருவடியைத் தான் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாத்தியடைய அவர் கரங்களை இறுக்கிப்பிடித்த அந்த இறைவனை வயாவிளான் இணையம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சுபம்

பதிவு: கந்தஜோதி