குப்பிளானை சேர்ந்த 1988 O/L வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் நவீன கணனிமயப்படுத்தப்பட்ட நூலகம் அமைப்புக்கு உதவி!

தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக, “அகத்தியன்-2020” எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட நவீன கணனிமயப்படுத்தப்பட்ட நூலகம் அமைக்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

அனைத்து வயவன்களுக்கும் வணக்கம் 🙏
திட்டம் : கல்வி அபிவிருத்தி
பிரிவு : நூலக மேம்பாடு
திட்டக் குறியீடு : “அகத்தியன்-2020”
அன்புடையீர்,
எமது துறைசார் வல்லுநர் குழு இத்திட்டம் தொடர்பான பகுப்பாய்வுகளில் ஈடுபட்டுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்ற குப்பிளான் ஊரைச் சேர்ந்த 1988 O/L வகுப்பு பழைய மாணவ & மாணவிகள் எனும் நண்பர்கள் குழு ஒன்று தாமாகவே முன்வந்து நிதிப்பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்பதையும் இத்தால் அறியத்தருகின்றோம்.
இந் நூலகத்தின் அமைப்பும் செயற்பாடும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பொது நூலகம், வவுனியா பொது நூலகம் போன்ற இன்னும் பல முக்கியமானதும் பிரபல்யமானதுமான நூலகங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் ஒத்ததாக இருக்கும். சர்வதேசத் தரத்துடன், இணையவழியாக 24 மணிநேரமும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பயன்பெறக்கூடியதாகவும் அமையும்.
இத்திட்டத்தின் மூலம், திரு.ராஜதுரை சின்னத்துரை (தென்மூலை, வயாவிளான்) அவர்களால் அன்பளிப்பாக எமது கல்லூரிக்கு கட்டித்தரப்பட்ட நூலகத்திலுள்ள எமது கல்லூரியின் அரிய நூல்கள் யாவும் தரம் பிரிக்கப்பட்டு, துறை வாரியாக வகைப்படுத்தி, இத்தொழில்நுட்பவாயிலாகப் பட்டியலிடப்படும். புத்தகங்களின் சுழற்சி, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை திறம்பட மேலாண்மை செய்யப்படும். பயனாளர்களால் இந் நூல்களின் “கிடைக்கும் சாத்தியம்” (Availability) இணையமூலம் அறிந்து முன்பதிவு செய்யவும் முடியும்.

ஒவ்வொரு மாணவர்களும் புத்தங்களை பயன்படுத்தும் தரவுகளை ஆராய்ந்து, அடுத்ததாக எந்தெந்த மாணவர்களுக்கு எந்தெந்த புத்தகங்களை பரிந்துரைக்கலாம் என்பதை ஆசிரியர்கள் இனங்கண்டு செயலாற்றலாம்.
“மின் புத்தகங்கள் ” (e-books) பயன்படுத்தப்படும்போது, கணனி வழியாகவோ, அல்லது நவீன கைத்தொலைபேசி ஊடாகவோ அவரவருக்கு வழங்கப்படும் “அடையாள எண்” & “கடவுச்சொல்” ஆகியவற்றைப் பயன்படுத்தி, நூலகத்துடன் இணைப்பை ஏற்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாரம் ஏழு நாளும், 24 மணிநேரமும் ஒரு புத்தகத்தை ஒரே நேரத்தில் பலநூறுபேர் வாசிக்கவும் முடியும்.

திறன் வகுப்பறை (smart-classroom) பயனாளர்கள் வகுப்பறையில் இருந்தவாறே கடந்தகால வினாத்தாள் மீட்டல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
திறன் வகுப்பறை ஆசிரியர்கள் புத்தகங்களிலுள்ள உதாரணங்கள் மற்றும் விளக்கங்களை மேற்கோள் காட்டி கற்பிப்பதற்கும் இலகுவாக இருக்கும்.
* முக்கியமாக, வீடுகளில் இணைய வசதி இல்லாத மாணவர்களும் அல்லது நவீன கைத்தொலைபேசி வசதியற்ற மாணவர்களும் நூலகத்தில் பொருத்தப்படவிருக்கும் கணனிகளின் மூலம் பயன்பெறக்கூடிய வகையிலேயே இத்திட்டம் அமையும். அத்துடன் தேவைப்படும் பட்சத்தில், புத்தகங்களின் குறிப்பிட்ட பக்கங்கள், அலகுகள் போன்ற இன்னபிற விடயங்கள் நூலக நிர்வாகத்தினரால் பிரதி எடுத்தும் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.

தற்போதைய சுகாதாரச் சூழல் போன்றதொரு இக்கட்டான நிலை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படினும், பயனாளர்கள் தொடர்ந்தும் உபயோகிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
இவ் அரும்பணியை நிறைவேற்ற உதவுவதன் மூலம் எமது கல்லூரியை இன்னுமொரு படி உயர்த்தும் “குப்பிளான் 1988 O/L வகுப்பு பழைய மாணவ & மாணவிகள் நண்பர்கள் குழு”விற்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
“செம்மை நெறி நில்”
இங்கனம்
தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.
news source:
தரணி வாழ் வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்.