ஆதி வயாவிளான் என்னவாக இருந்திருக்கும் – வயவையின் வழித்தடத்தில் ஒரு தேடல் !

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளின் பின்னர் வயவையூரின் தென்பகுதி விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றத்தின் பொருட்டு மண்டிக்கிடக்கும் காடுகளை அழித்துச் சீர்படுத்தும் மகிழ்வலைகள் எல்லோர் மனங்களையும் வயவையூருலா அழைத்துச் சென்றிருக்கும். இவ்வழகிய தருணத்தில் அந்தக் கால வயவை நிலம் என்னவாக இருந்திருக்கும் என்பதை அறிய முனைதல் பொருத்தமாக இருக்கும்.
வயவை மண் மிகச் சிறந்த விளைச்சல் மண் என்ற புகழ்பெற்றது. அந்த மண்ணின் மைந்தர்கள் சிந்தும் வியர்வை செந்நிறமோ என்று எண்ணும் அளவுக்கு செக்கச் சிவந்த செம்பாட்டுமண்ணில் கத்தரி, வெண்டி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் அமோக விளைச்சலைத் தரும். கால மாற்றத்திற்கு ஏற்பவும் காசு பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும் சந்தை நிலவர அடிப்படையில் கண்ட மாற்றமே மேற்சொன்ன பயிரிடுகைகள்.
தோட்டத்தில் இட்ட காய்கறிகளை வீட்டுக்கும் சொந்த பந்தங்களுக்கும் பங்கிட்டு, மிச்சத்தை தின்னவேலிச் சந்தைக்கும் சுன்னாகச் சந்தைக்கும், எங்களூர் சந்தையிலும் விற்று பொருளாதார வளர்ச்சியை விரட்டிப் பிடிக்க முனைந்த வயவையூர்த் தோட்டக்காணிகளில் முன்பெல்லாம் குரக்கன், சாமை வகைத் தானியங்கள் விளைவிக்கப்பட்டதாக நினைவுகளால் மலர்வர் 1910 களில் பிறந்தோர்.
குரக்கன் புட்டும் மரவள்ளிக் கறியும் திண்டு திரண்ட உடம்பு என்று இரு(ம்பு)மாப்புடன் மார்பு நிமிர்த்தும் எங்களவர்கள் செய்த இன்னொரு விஷயம் இன்றும் பசுமை நிறை நினைவுகளாக படர்ந்திருக்கின்றன. கண்டாவளைக்கு மாடு கொண்டு போவது எனும் இன்னொரு திருவிழாவே அப்பசுமை நிறை நினைவுகள். வீட்டுக்கு வீடு இல்லாவிட்டாலும் தோட்டம் செய்யும் பலருடைய வீடுகளில் மாடுகள் வளர்க்கப்படும். குறிப்பிட்ட ஒரு நாளில் அம்மாடுகளுக்கு குடும்ப அங்கத்தவரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு குறிசுடப்படும். குறிசுடப்பட்ட மாடுகளை சாய்ச்சுக்கொண்டு பொடி நடையாக குழுப்பயணம் தொடங்கும்.
வயாவிளானில் தொடங்கி, களைப்பு அண்டாமல் இருக்க பண்ணிசையும் பகிடிகளுடனும் தொடரும் இப்பயணம் வன்னி – கண்டாவளை வரை நீளும். சில நேரங்களில் இது பூநகரி வரை நீ…ண்ட சமயங்களும் உண்டு. இந்நீள் பயணத்தின் போது வயல்களில் மாடுகளை பட்டி அடைத்து, மாட்டுச் சாணத்தின் மூலம் இயற்கை முறையில் வயலை வளமாக்குவதும், அதன் மூலம் பொருளீட்டுவதும் நடக்கும். நிற்க, மேலே குறிப்பிடப்பட்ட சாமை, குரக்கன் விளைத்தலும், ஆநிரை மேய்த்தலும் (மாடு மேய்த்தலும்) என இயற்கையோடு இயைந்த வயவையின் இரு தொழில்களையும், ஒரு ஓரத்தில் நினைவில் வைத்துக் கொண்டு வயவையில் காணப்படும் மரங்களை ஒரு சுற்றுச் சுற்றி வர வெளிக்கிட்டால், ஆயுள் எவ்வளவு என்றே தெரியாத பல்வகை மரங்கள் எங்கள் வயவையில் காணலாம்.
காவடிச்சிந்து மரம் என்று அழைக்கப்படும், வயாப்பள்ளத்துக்கு முன்னால் நின்ற, வீரபத்திரர் ஆலய விருட்சமாக விளங்கக் கூடிய ஆயில்மரம்… தென்வயவையின் ஞானவைரவர் ஆலயதருவாக உருவகிக்கக்கூடிய புளிய மரம்.. மலட்டுப் பேத்தி அம்மன் கோவிலுக்கு நிழல் கொடுக்கும் முல்லை மரம்… வன்னியர் கோவில் முன்றலில் நிற்கும் ஆல மரம்… ஊரில் ஆங்காங்கே காணப்படும் வெள்ளரசு மரங்கள்.. என்ற நெடுவரிசையில் தோட்டப் பக்கம் உள்ள கொன்றை மரத்தை மேலே சொன்ன இரு தொழில்களோடு இணைத்து தமிழிலக்கியப்பக்கம் பார்வையைத் திருப்பினால்… தமிழிலக்கியங்கள் தமிழன் வாழ்ந்த இடங்களை நானிலமாக வகைப்படுத்தின. அந்நிலங்களில் வாழ்ந்தோரின் இயற்கையோடு இயைந்த இயல்பான வாழ்வியலை அந்நிலத்தின் அம்சங்கள் ஆக்கின. அதாவது இந்த நிலத்தில் இன்ன மரம் நின்றது, இந்த இடத்தில் வாழ்ந்தோர் இன்ன தொழிலைச் செய்தனர், என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தன தமிழிலக்கியங்கள். மறுதலையாக, இன்னமரமும், இன்ன பூவும், இன்ன மிருகமும், இன்ன பறைவையும், இன்ன தொழிலும் இருந்தால் அந்த நிலம் மலைகள் நிறைந்த குறிஞ்சியாக இருந்ததா? கடல் விரிந்த நெய்தலாக இருந்ததா? காடு நிறை முல்லையாக இருந்ததா? வயல் பரந்த மருதமாக இருந்தா? என்பதை எம்மால் அறியக் கூடிய வகையில் தமிழிலக்கியப் பதிவுகள் உள்ளன.
அந்த வகையில் வரகு, சாமை, குரக்கன் விளைத்தலும் ஆநிரை (மாடு) மேய்தலும், கொன்றை மரமும் காடுகள் நிறைந்த முல்லை நிலத்துக்குரியன என தமிழிலக்கியம் சொல்கிறது. எனவே தமிழிலக்கிய அடிப்படையில், ஆதி வயவையானது காடுகள் நிறைந்த முல்லை நிலமாக இருந்தது என நிரூபிக்கலாம். இந்த இடத்தில் வயவையில் வேறு தொழில்களும் உள்ளனவே? வேறு மரங்களும் உண்டே என்ற எதிர்வாதம் எழலாம். வயவையில் உள்ள கைத்தொழில்கள், அரசாங்க உத்தியோகங்கள் எல்லாம் இலக்கியப் பதிவுகளின் படி புறத்தினைக்குள் அடக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது அவை ஒட்டு மொத்தத் தமிழனின் தனிச்சிறப்பாகக் கூறபட்டிருக்கின்றன எனக் கொள்ளலாம். மரங்களும் அவ்வாறே… ஆனாலும் இலக்கியப் பாதையில் வயவையின் வழித்தடம் பிடிக்கையில் ஆதி வயவை காடுகள் நிறைந்த முல்லையா? வயல்கள் நிறைந்த மருதமா? என்ற மயக்கம் ஏற்படும். வரலாற்று ரீதியில் அம்மயக்கத்தை தெளிவுறச் செய்து ஆதி வயவை காடுகள் நிறைந்த முல்லை நிலமே என உறுதியாகக் கூறலாம்.